Friday, March 19, 2010

தியான ஓட்டம்

தியான ஓட்டம்

கண்ணை மூடி தியானம் செய்யமுயன்றேன்.
இன்று மேட்சில் தோனி செஞ்சுரி அடிப்பானா
பால்காரன் வந்து விடுவானோ
நேற்று விடுப்பு எடுத்த வேலைக்காரி இன்றாவது வருவாளா
வயிற்றுவலி என்ற மகன் பள்ளியில் என்ன செய்கிறானோ
ஐந்து நிமிடம் ஆகியிருக்குமே
நேரம் ஓடியிருந்தது
கூடவே மனதும் தான்

Wednesday, March 17, 2010

காதல் வலை

“காதல் வலை”

தமிழ்ப் பேராசிரியை கற்பகம் அந்தப் பெயர்ப் பட்டியலைப் புரட்டினார். எந்த ஒரு போட்டியிலுமே தாமரையின் பெயரைக் காணவில்லை.

போன வருடம் நடந்த பல போட்டிகளில் பங்கு பெற்று பலரின் பாராட்டைப் பெற்ற மாணவி தாமரை. அவளை அழைத்து வருமாரு பியூனிடம் கூறினார்.

அடுத்த வாரம் கல்லூரி ஆண்டு விழா. இருபாலர் படிக்கும் கல்லூரி என்பதால், மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருக்கும்.

ஒவ்வொரு போட்டிக்கும் மதிப்பெண் கொடுத்து, தங்கள் திறமையைத் திறம்பட வெளிப்படுத்தும் ஒருவருக்கு, அந்த ஆண்டின் ஹீரோ அல்லது ஹீரோயின் விருது வழங்கப்படுவது வழக்கம்.

தாமரையின் வட்ட முகம், கிராமத்தனம் மாறாத வெகுளிப்பேச்சு, பார்த்தவுடனேயே சிரிக்கும் கண்கள், அவளை எல்லோருக்கும் பிடித்த மாணவியாக்கின.

பாட்டுப் போட்டி, கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் என்று எல்லாவற்றிலும் கல்க்கினாள்.
போன ஆண்டு, போட்டியின் போது தாமரை பாடிய கிராமத்துத் தாலாட்டுப்பாட்டுக்கு, கல்லூரியே எழுந்து நின்று கைதட்டியது.

எதிரே நிழலாட, பேராசிரியை கற்பகம் நினைவு கலைந்து தலை நிமிர்த்தினாள்.

தாமரைதான்.!

“என்ன மேம்?”

“இந்த வருடம் நம்ம கல்லூரி ஹீரோயின் நீ தான்னு எல்லோரும் பேசிக்கறாங்க. ஆனால், ஒரு போட்டியிலும் உன் பெயரைக் காணோம்..?”

தாமரையின் மருண்ட விழிகள் வருத்தமாய் உருண்டன.

“உடம்பு சரியில்லையாம்மா?” - கற்பகத்தின் கனிவான பேச்சில் கரைந்து போய் அழ ஆரம்பித்தாள். அவள் மனதின் பாரம் குரையட்டும் என்று அழுது முடிக்கக் காத்திருந்தார் பேராசிரியை.

“சொல்லு என்னாச்சு?”

“செந்திலுக்குப் பிடிக்கலே மேம்” என்றாள் மெல்லிய குரலில்.

“செந்தில்?”

“ஃபைனல் இயர் படிக்கிறாரே.. ஸ்டூடண்ட்ஸ் சேர்மன்அவர்தான்”

கற்பகத்துக்குப் புரிய ஆரம்பித்தது.

காதல்!

“போன வருடம் நான் பாடியதைக் கேட்டதிலேயிருந்து, என் பின்னாடி சுற்றி வந்தார். போகப்போக எனக்கும்அவரைப் பிடிச்சுப்போச்சு. ஆரம்பத்தில் என் திறமைகளைப் பாராட்டினவர், இப்பல்லாம், என்னைத் தடுக்கறார். இந்த வருடம் நான் எந்தப் போட்டியிலுமே கலந்துக்கக் கூடாதுன்னு தடைபோட்டுட்டார்..”

“என்ன காரணமாம் தாமரை?”

“நான் அவருக்கு உரியவளாம். என்னை எல்லோரும் பார்க்கறதும், பாராட்டுற சாக்குல வந்து பேசறதும் பிடிக்கலையாம்”

“சரி, மீறி நீ போட்டியிலே கலந்துக்கிட்டா என்னாகுமாம்”

“அவர் என்னைக் காதலிக்கவும் மாட்டாராம், கல்யாணமும் பண்ணிக்க மாட்டாராம்”

“போறானே.. என்ன ஆயிடும்?”

தாமரையின் கண்களிலிருந்து நீர் வழிந்தது

“நானும் செந்திலும் காதலிக்கற விஷயம் இந்தக் கல்லூரி முழுக்கத் தெரியும். அவர் என்னை மறுத்துட்டா, என் பெயர் தானே களங்கப்படும். அப்புறம் என் வாழ்க்கை?”

கோபம் வந்தாலும், சற்று நேர அமைதிக்குப் பின், கற்பகம் தம்மை நிதானப்படுத்திக்கொண்டு பேசினார்.

“ இப்ப உன் வாழ்க்கை ஆனந்தம் தருதா, இல்லை , அவஸ்தையாயிருக்கா?”

“அது.. இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக்காதே, இப்படி தலையைப் பின்னிக்காதே, அவனோடு பேசாதே, சத்தமாய் சிரிக்காதேன்னு, எதைச் செய்தாலும் , செந்தில் தடுக்கறப்போ, கோபமாய் வருது மேம். ஆனால், எங்க காதல் ஊருக்குத் தெரிஞ்சு போனதுனாலே, பயமாகவும் இருக்கு..” என்றாள் தாமரை தழுதழுப்பாய்.

“எப்ப உங்க காதல் வருத்தம் தர ஆரம்பிடுச்சோ, அதுல காதல் இல்லைங்கறது என் அபிப்பிராயம். ஒரு பெண்னை விரும்பறது வேறு, அவளின் மேலே ஆதிக்கம் செலுத்தறது வேறு. செந்தில் உன் மேல் செலுத்தறது ஆண் என்ற ஆதிக்கம். இனி உன்னால் அவனை விட்டுப் போக முடியாது என்று தெரிந்து கொண்டு, சாமர்த்தியமாய் சிலந்தி வலை பின்னுகிறான். அந்த சிலந்தி வலையில் நீ இழக்கப் போவது உன் தனித்தன்மைகள், திறமைகள், சுயநம்பிக்கை, கடைசியாய் உன் வாழ்க்கை! பரஸ்பரம், இருவரும் ஒருவர் உணர்வைப் புரிந்து கொண்டு, மதித்தால்தான் காதலுக்கும் நல்லது, காதல் கைகூடினால் வரும் இல்லற வாழ்க்கைக்கும் நல்லது. யோசி! காதல் என்ற பூச்சாண்டிக்குப் பயந்து , உன்னை இழக்கப்போகிறாயா, அல்லது, உனக்கு நீதான் முக்கியம் என்று உணர்ந்து, காதலை இழக்கப் போகிறாயா? நாளை வந்து என்னைப் பார்” என்றாள் பேராசிரியை

தாமரை திகைப்புடன் சற்று நேரம் சிலை போல நின்றாள்.

அந்த வருடக் கல்லூரி விழாவிலும் , அந்த கிராமத்துக் குயில் பாடியது.

Monday, March 8, 2010

கருப்பன்

“கருப்பன்”

பேருந்தை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கியதுமே எனக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
ஒரு மாதம் முன்பு தான் இந்த காலனிக்குக் குடி மாறினேன்.

தனி வீடு, அட்வான்ஸ், வாடகை... எல்லாமே என் கைக்குள் அடக்கம்
மகனின் பள்ளிக்கூடம் பத்து நிமிட நடையில் என்று பல சௌகரியங்கள் கிடைத்த போதும் , என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

தன்னை நினைக்க வேண்டும் என்பதற்காகவே , பகவான் பல சந்தோஷங்களைக் கொடுத்தாலும், நெருடலாய் ஒரு துன்பத்தையும் கொடுப்பான் என்று எங்கோ படித்ததாய் ஞாபகம். இந்தியா பக்கத்தில் பாக்கிஸ்தானைக் கொடுத்தது போல?!.

பேருந்து நிறுத்தத்திலிருந்து பத்து நிமிட நடையில்தான் வீடு. அந்த சந்தடியற்ற சந்தைக் கடக்கும் போது தான் வினையே.

எனக்குள் சகல நரம்புகளும் விறைத்துக் கொண்டன.

அந்தத் திகில் சந்தினுள் நுழைந்து கால்வாசி தூரம் கடப்பதற்குள் “உர்”ரென்ற உறுமல் சத்தம் காதில் விழுந்ததும் எனது உரோமக் கால்கள் குத்திட்டு நின்றன.

அதோ ஜொலிக்கும் கண்களுடன் “கருப்பன்” வந்துவிட்டான். அழுக்கேறிப்போன தெரு விளக்கின் மெலிந்த வெளிச்சத்தில், கருப்பனின் கண்கள் தீப்பந்தாய் எரிக்க, பல்லை அருவெருப்பாய் காட்டியபடி, என்னைப் பார்த்து குரைத்தான். பயத்தில் எச்சிலை விழுங்கினேன்.

மழையோ வெயிலோ எப்போதும் என்னிடம் குடை வைத்திருப்பேன், தயாராய் வைத்திருந்த குடையை என்னைச் சுற்றிச் சுழற்றினேன். ஏய், கருப்பு தடியா, சனியன் பிடிச்ச நாயே, காக்கக் காக, கனகவவேன் காக்க.. அப்படியே தூரமாய் நில்லு” என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறியபடி, வேகநடை நடந்தேன்.

என்னிலிருந்து ஐந்தடி தள்ளியே என்னைக் கடித்துவிடுவது போலத் தொடர்ந்த அந்த நய், சந்தின் முனை வந்ததும் நின்று விடும் எப்போதும். என்ன லஷ்மணன் கோடு இருக்கிறதோ, தெரியாது.

வீடு வந்து சேர்ந்தேன்.

என் நிலையைக் கண்டு சிரிப்பை அடக்கியபடி பார்த்தாள் என் மனைவி.

சாப்பிட்டு முடித்து, டிவி முன் வந்து உட்கார்ந்ததும், என் மனைவி சொன்னாள்.
“உங்க அண்ணன் ஃபோன் பண்ணினார். இரண்டு மாதம் முன்னாடி பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தாரே, அதைத் தரமுடியுமா இப்பன்னு கேட்கச் சொன்னாரு”

எனக்குச் சட்டென கோபம் வந்தது.
“உதவி செய்யற மாதிரி கொடுக்க வேண்டியது. உடனே மனசுக்குள்ளே சந்தேகம்! பணம் திரும்பி வருமா, வராதான்னு சந்தேகப்படறது” என்று அலுத்துக்கொண்டேன்.

கனவில் கருப்பனும், அண்ணனும் மாறி, மாறித் துரத்த, தூங்கிப் போனேன்.

அடுத்த ங்காள் மாலை அலுவலகத்துக்கு ஃபோன் வந்தது. என் மனைவி தான்.

“நாங்க கடைத் தெருவுக்குப் போயிட்டு ஆறரை மணி போல திரும்புவோம். நீங்களும் அந்த நேரம் திரும்பினீங்கன்னா சேர்ங்தே வீட்டுக்குப் போயிடலாம். கூடவே, உங்களுக்கு ஒரு அதிசயமும் காத்துக்கிட்டிருக்கு” என்றாள்.

:ஐயோ கருப்பனிடம் என் மனைவியும், மகனும் மாட்டிக்கொண்டாலென்னாகும்?

மனசுக்குள் உதைக்கத்தொடங்கியது.

குடும்பத் தலைவனின் தர்மத்துடன், ஆறு மணிக்கே போய் பேருந்து நிலையத்தில் இறங்கி, அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

சொன்னது போலவே ஆறறை மணிக்கு வந்து விட்டனை மனைவியும், மகனும்.

“அய், அப்பா முகத்தை சாயந்திர வெளிச்சத்திலே பார்க்க எவ்வளவு பிரகாசமாய் இருக்கு” என்று கலாய்த்தான் சீமந்தபுத்திரன்.


“அது முகத்தோட ஒளி இல்லைடா. முல் வழுக்கையோட ஒளிச் சிதறல்” என்று இரகசியம் பேசுவது போல என் மனைவி கேலி செய்ய, சிரிப்பு வந்தது.

கூடவே கருப்பனின் நினைப்பும் வந்தது.

“இதோ பாருங்க ஜாக்கிரதை. அதோ அந்த சந்து திரும்பியதும், கருப்பன் இருப்பான்” என்று எச்சரித்தேன்.

என் மனைவியும், மகனும் ஒருவரை ஒருவை பூடகமாய்ப் புன்னகைத்தனர்.

“இன்னிக்கு உங்க அப்பாவுக்கு அந்த சந்துல ஓர் ஆச்சரியம் காத்துக்கிட்டிருக்கு, இல்லையாடா” என்றாள் மனைவி.

புரியாமல் நடந்தேன். என் கையைப்பற்றி சாந்தப்படுத்தினாள் மனைவி.
என் இரு பக்கமும் கவசமாய் அவர்கள் நடக்க ஆரம்பித்தனர்.

அதொ கருப்பன் என்னைக் கண்டதும் “உர்”ரென உறும ஆரம்பித்த அந்த நாய், என்ன நினைத்ததோ, வெறுமனே பார்த்தபடி நின்றது.

நம்பமுடியாமல் வியப்புடன் கருப்பனைப் பார்த்தேன்

“இந்த நாய், புதுசாய் குட்டி போட்டிருக்குதுங்க. நால்ய் குட்டிங்க.. அழகாய் கருப்பும், வெள்ளையுமாய். இருட்டிலே வரும் போது நீங்க அங்கே இருக்கற அந்த சின்னக் கட்டடம் பக்கம் போயிருப்பீங்க முதல் நாள், குட்டிங்களைப் பாதுகாக்க, கருப்பன் உங்களைப் பார்த்து பயந்து போய்க் குரைச்சிருக்கும். நீங்ககளும் அதைக் கண்டு பயந்து போய், உங்க குடையை ஆட்டியிருப்பீங்க. இது தினசரி வாடிக்கையாய்ப் போயிருக்கணும். தன் குட்டிகளைப் பாதுகாக்க நினைக்கற ஒரு தாயோட உக்ரம் இது. பொதுவாகவே, மனிதனோட பயத்தை எளிதாய் மோப்பம் பிடிச்சிடும் நாய்ங்க..” என்றாள் என் மனைவி.

“அம்மா அதோ பாருங்க நாய்க்குட்டிகளை” என்று உற்சாகமாய் கத்தினான் என் மகன்.

கடைத்தெருவுக்குப் போறப்ப இந்த சந்து வழியாய் வந்தோம். உங்க கருப்பனையும் பார்த்தோம். விஷயம் புரிீஞ்சது. ரொட்டி வாங்கிப் போட்டோன். எல்லா செயல்களுக்குமே மூன்றாவது கோணம்னு ஒண்ணு இருக்குதானே” என்றாள் என் மனைவி.

“அதென்ன மூன்றாவது கோணம்?” என்றேன்.

“பிரச்சனைன்னு வந்தால் நாம பார்க்கற கோணம், எதிராளிங்க பார்க்கற கோண்ம், பிரச்சனையை நிஜமாகவே தீர்த்து வைக்கற கோணம். ஆக அது தான் மூன்றாவது கோணம்” என்றாள்.

ஞானியைக் காண்பது போல் மனைவியைப் பார்த்தேம்.

வீட்டுக்குத் திரும்பியதும் அண்ணனுக்கு ஃபோன் செய்தேன்.

“என்னாச்சு அண்ணா? திடீர் பணத்தேவைன்னு கேட்டியாமே? னீ கேட்ட பத்தாயிரம் ரூபாய் போதுமா, இல்லை கூட வேண்டுமா?”

என் கேள்வியினால் அண்ணன் நெகிழ்ந்திருக்க வேண்டும்.

“நன்றிடா! நீய்ப்படிக் கேட்டதும் அழுகை வந்துடுச்சு” என்றார்.

:என்ன அண்ணா , இதுக்குப்பஒய்..”

“நம்ம வீட்டுக்குப் பின்னாடி பெரிய மாமரம் இருந்துச்சுல்ல, திடீர் பேய்க்காத்துலே, வேரோட சாய்ந்து , நம்ம வீட்டு மேலே விழுந்துடுச்சு. சமையலறைப் பக்கம் சுவர் இடிஞ்சு போச்சு. உடனே மராமத்து பண்ணியாகணும். இருபதாயிரம் செலவு ஆகும்னு கான்ராக்டர் சொன்னார். அதான் உன்னிடம் இருந்ததுன்னா, போட்டுப் புரட்டி சரி பண்ணிடலாம்னு நினைச்சேன்”

“நாளைக்கே அனுப்பிடறேன் அண்ணா. முடிஞ்சா நேரில் வந்தே கொடுக்கப் பார்க்கறேன்” என்றேன்.

ஃபோன் பேசி முடித்ததும் என் மனைவி சொன்னாள்

“இப்ப உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”

Monday, February 15, 2010

தலைவன்

இந்த மாதம் முடியும் போது அதிசயம்.
வீட்டுச் செலவில் ஐநூறு ரூபாய் மிச்சம் இருந்தது
நீண்ட நாள் ஆசை!
ஷு வாங்க வேண்டும். அதுவும் ஸ்லிப் ஆன் ஷு வாங்க வேண்டும்
அலுவலகம் போகும்போது ஜம்மென்று போட்டுக் கொண்டு போக வேண்டும்
ரூபாய் ஐநூறுக்குள் தானே இருக்கும்?!

நாளைக்குக் கடைத்தெருவுக்குப் போகலாம் என்று மனைவியிடம் சொன்னேன்
கடைக்குக் கிளம்பும் போது மகளும் ஒட்டிக் கொண்டாள்

ஷு கடைக்குள் நுழைந்ததும் மகள் கண்ணில் பிங்க் நிற செருப்புப் பட்டுவிட்டது

“அப்பா எனக்கு அது வேணும்” என்று அடம் பிடித்தாள்

“ஏங்க காலில் பித்த வெடிப்பாய் இருக்கு. எனக்கும் காலை மூடற மாதிரி கான்வாஸ் செருப்பு வாங்கித் தர்ரீங்களா” என்றாள் மனைவி.

மகளுக்கும், மனைவிக்கும் செருப்பு வாங்கியதில் நானூறு ரூபாய் பணால்.

கடையை விட்டு வெளியே வரும் போது மனைவி கேட்டாள்

“ஏங்க நீண்ல் நாளாய் உங்களுக்கு ஷு வாங்கணும்னு சொன்னீங்களே, வாங்கிக்க வேண்டியது தானே”

“பரவாயில்லை, அப்புறம் பார்க்கலாம் என்றேன்.

“ஒரே சமயத்திலே நிறைய பணம் செலவழிக்க மனசு வராதே” என்று கிண்டலடித்தாள்.

புது செருப்பு வாங்கிய திருப்தியை அவர்கள் முகத்தில் கண்டவாறு சிரித்தேன்.

Sunday, February 14, 2010

உறுத்தல்


ஒன்றை ஒன்று
கவ்வி விளையாடும் நாய்கள்
துரத்தி விளையாடும் பூனைகள்
வானில் சிறகு விரித்துப்
பறக்கும் பறவைகள்
உறுத்தலாய் -
புத்தகப்பை சுமக்கும்
குழந்தைகள்