Wednesday, March 17, 2010

காதல் வலை

“காதல் வலை”

தமிழ்ப் பேராசிரியை கற்பகம் அந்தப் பெயர்ப் பட்டியலைப் புரட்டினார். எந்த ஒரு போட்டியிலுமே தாமரையின் பெயரைக் காணவில்லை.

போன வருடம் நடந்த பல போட்டிகளில் பங்கு பெற்று பலரின் பாராட்டைப் பெற்ற மாணவி தாமரை. அவளை அழைத்து வருமாரு பியூனிடம் கூறினார்.

அடுத்த வாரம் கல்லூரி ஆண்டு விழா. இருபாலர் படிக்கும் கல்லூரி என்பதால், மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருக்கும்.

ஒவ்வொரு போட்டிக்கும் மதிப்பெண் கொடுத்து, தங்கள் திறமையைத் திறம்பட வெளிப்படுத்தும் ஒருவருக்கு, அந்த ஆண்டின் ஹீரோ அல்லது ஹீரோயின் விருது வழங்கப்படுவது வழக்கம்.

தாமரையின் வட்ட முகம், கிராமத்தனம் மாறாத வெகுளிப்பேச்சு, பார்த்தவுடனேயே சிரிக்கும் கண்கள், அவளை எல்லோருக்கும் பிடித்த மாணவியாக்கின.

பாட்டுப் போட்டி, கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் என்று எல்லாவற்றிலும் கல்க்கினாள்.
போன ஆண்டு, போட்டியின் போது தாமரை பாடிய கிராமத்துத் தாலாட்டுப்பாட்டுக்கு, கல்லூரியே எழுந்து நின்று கைதட்டியது.

எதிரே நிழலாட, பேராசிரியை கற்பகம் நினைவு கலைந்து தலை நிமிர்த்தினாள்.

தாமரைதான்.!

“என்ன மேம்?”

“இந்த வருடம் நம்ம கல்லூரி ஹீரோயின் நீ தான்னு எல்லோரும் பேசிக்கறாங்க. ஆனால், ஒரு போட்டியிலும் உன் பெயரைக் காணோம்..?”

தாமரையின் மருண்ட விழிகள் வருத்தமாய் உருண்டன.

“உடம்பு சரியில்லையாம்மா?” - கற்பகத்தின் கனிவான பேச்சில் கரைந்து போய் அழ ஆரம்பித்தாள். அவள் மனதின் பாரம் குரையட்டும் என்று அழுது முடிக்கக் காத்திருந்தார் பேராசிரியை.

“சொல்லு என்னாச்சு?”

“செந்திலுக்குப் பிடிக்கலே மேம்” என்றாள் மெல்லிய குரலில்.

“செந்தில்?”

“ஃபைனல் இயர் படிக்கிறாரே.. ஸ்டூடண்ட்ஸ் சேர்மன்அவர்தான்”

கற்பகத்துக்குப் புரிய ஆரம்பித்தது.

காதல்!

“போன வருடம் நான் பாடியதைக் கேட்டதிலேயிருந்து, என் பின்னாடி சுற்றி வந்தார். போகப்போக எனக்கும்அவரைப் பிடிச்சுப்போச்சு. ஆரம்பத்தில் என் திறமைகளைப் பாராட்டினவர், இப்பல்லாம், என்னைத் தடுக்கறார். இந்த வருடம் நான் எந்தப் போட்டியிலுமே கலந்துக்கக் கூடாதுன்னு தடைபோட்டுட்டார்..”

“என்ன காரணமாம் தாமரை?”

“நான் அவருக்கு உரியவளாம். என்னை எல்லோரும் பார்க்கறதும், பாராட்டுற சாக்குல வந்து பேசறதும் பிடிக்கலையாம்”

“சரி, மீறி நீ போட்டியிலே கலந்துக்கிட்டா என்னாகுமாம்”

“அவர் என்னைக் காதலிக்கவும் மாட்டாராம், கல்யாணமும் பண்ணிக்க மாட்டாராம்”

“போறானே.. என்ன ஆயிடும்?”

தாமரையின் கண்களிலிருந்து நீர் வழிந்தது

“நானும் செந்திலும் காதலிக்கற விஷயம் இந்தக் கல்லூரி முழுக்கத் தெரியும். அவர் என்னை மறுத்துட்டா, என் பெயர் தானே களங்கப்படும். அப்புறம் என் வாழ்க்கை?”

கோபம் வந்தாலும், சற்று நேர அமைதிக்குப் பின், கற்பகம் தம்மை நிதானப்படுத்திக்கொண்டு பேசினார்.

“ இப்ப உன் வாழ்க்கை ஆனந்தம் தருதா, இல்லை , அவஸ்தையாயிருக்கா?”

“அது.. இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக்காதே, இப்படி தலையைப் பின்னிக்காதே, அவனோடு பேசாதே, சத்தமாய் சிரிக்காதேன்னு, எதைச் செய்தாலும் , செந்தில் தடுக்கறப்போ, கோபமாய் வருது மேம். ஆனால், எங்க காதல் ஊருக்குத் தெரிஞ்சு போனதுனாலே, பயமாகவும் இருக்கு..” என்றாள் தாமரை தழுதழுப்பாய்.

“எப்ப உங்க காதல் வருத்தம் தர ஆரம்பிடுச்சோ, அதுல காதல் இல்லைங்கறது என் அபிப்பிராயம். ஒரு பெண்னை விரும்பறது வேறு, அவளின் மேலே ஆதிக்கம் செலுத்தறது வேறு. செந்தில் உன் மேல் செலுத்தறது ஆண் என்ற ஆதிக்கம். இனி உன்னால் அவனை விட்டுப் போக முடியாது என்று தெரிந்து கொண்டு, சாமர்த்தியமாய் சிலந்தி வலை பின்னுகிறான். அந்த சிலந்தி வலையில் நீ இழக்கப் போவது உன் தனித்தன்மைகள், திறமைகள், சுயநம்பிக்கை, கடைசியாய் உன் வாழ்க்கை! பரஸ்பரம், இருவரும் ஒருவர் உணர்வைப் புரிந்து கொண்டு, மதித்தால்தான் காதலுக்கும் நல்லது, காதல் கைகூடினால் வரும் இல்லற வாழ்க்கைக்கும் நல்லது. யோசி! காதல் என்ற பூச்சாண்டிக்குப் பயந்து , உன்னை இழக்கப்போகிறாயா, அல்லது, உனக்கு நீதான் முக்கியம் என்று உணர்ந்து, காதலை இழக்கப் போகிறாயா? நாளை வந்து என்னைப் பார்” என்றாள் பேராசிரியை

தாமரை திகைப்புடன் சற்று நேரம் சிலை போல நின்றாள்.

அந்த வருடக் கல்லூரி விழாவிலும் , அந்த கிராமத்துக் குயில் பாடியது.

3 comments:

  1. பரஸ்பரம், இருவரும் ஒருவர் உணர்வைப் புரிந்து கொண்டு, மதித்தால்தான் காதலுக்கும் நல்லது, காதல் கைகூடினால் வரும் இல்லற வாழ்க்கைக்கும் நல்லது.

    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. காதலின் தன்மையையும்,உண்மையையும் அந்த தாமரைக்கு புரிய வைத்த தமிழ்ப் பேராசிரியை கற்பகத்துக்கு ஒரு ஜே !!! இந்த கதையை படைத்த கிருஷ்ணாவுக்கு ஒரு ஜே போட்டு எல்லோரும் கை தட்டுங்க பார்க்கலாம்!!!!!!!!!!

    ReplyDelete
  3. வலை அறுக்கச்
    சொல்லித்தந்த
    கிருஷ்ணாவுக்குப்
    பாராட்டு.

    ReplyDelete