Monday, March 8, 2010

கருப்பன்

“கருப்பன்”

பேருந்தை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கியதுமே எனக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
ஒரு மாதம் முன்பு தான் இந்த காலனிக்குக் குடி மாறினேன்.

தனி வீடு, அட்வான்ஸ், வாடகை... எல்லாமே என் கைக்குள் அடக்கம்
மகனின் பள்ளிக்கூடம் பத்து நிமிட நடையில் என்று பல சௌகரியங்கள் கிடைத்த போதும் , என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

தன்னை நினைக்க வேண்டும் என்பதற்காகவே , பகவான் பல சந்தோஷங்களைக் கொடுத்தாலும், நெருடலாய் ஒரு துன்பத்தையும் கொடுப்பான் என்று எங்கோ படித்ததாய் ஞாபகம். இந்தியா பக்கத்தில் பாக்கிஸ்தானைக் கொடுத்தது போல?!.

பேருந்து நிறுத்தத்திலிருந்து பத்து நிமிட நடையில்தான் வீடு. அந்த சந்தடியற்ற சந்தைக் கடக்கும் போது தான் வினையே.

எனக்குள் சகல நரம்புகளும் விறைத்துக் கொண்டன.

அந்தத் திகில் சந்தினுள் நுழைந்து கால்வாசி தூரம் கடப்பதற்குள் “உர்”ரென்ற உறுமல் சத்தம் காதில் விழுந்ததும் எனது உரோமக் கால்கள் குத்திட்டு நின்றன.

அதோ ஜொலிக்கும் கண்களுடன் “கருப்பன்” வந்துவிட்டான். அழுக்கேறிப்போன தெரு விளக்கின் மெலிந்த வெளிச்சத்தில், கருப்பனின் கண்கள் தீப்பந்தாய் எரிக்க, பல்லை அருவெருப்பாய் காட்டியபடி, என்னைப் பார்த்து குரைத்தான். பயத்தில் எச்சிலை விழுங்கினேன்.

மழையோ வெயிலோ எப்போதும் என்னிடம் குடை வைத்திருப்பேன், தயாராய் வைத்திருந்த குடையை என்னைச் சுற்றிச் சுழற்றினேன். ஏய், கருப்பு தடியா, சனியன் பிடிச்ச நாயே, காக்கக் காக, கனகவவேன் காக்க.. அப்படியே தூரமாய் நில்லு” என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறியபடி, வேகநடை நடந்தேன்.

என்னிலிருந்து ஐந்தடி தள்ளியே என்னைக் கடித்துவிடுவது போலத் தொடர்ந்த அந்த நய், சந்தின் முனை வந்ததும் நின்று விடும் எப்போதும். என்ன லஷ்மணன் கோடு இருக்கிறதோ, தெரியாது.

வீடு வந்து சேர்ந்தேன்.

என் நிலையைக் கண்டு சிரிப்பை அடக்கியபடி பார்த்தாள் என் மனைவி.

சாப்பிட்டு முடித்து, டிவி முன் வந்து உட்கார்ந்ததும், என் மனைவி சொன்னாள்.
“உங்க அண்ணன் ஃபோன் பண்ணினார். இரண்டு மாதம் முன்னாடி பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தாரே, அதைத் தரமுடியுமா இப்பன்னு கேட்கச் சொன்னாரு”

எனக்குச் சட்டென கோபம் வந்தது.
“உதவி செய்யற மாதிரி கொடுக்க வேண்டியது. உடனே மனசுக்குள்ளே சந்தேகம்! பணம் திரும்பி வருமா, வராதான்னு சந்தேகப்படறது” என்று அலுத்துக்கொண்டேன்.

கனவில் கருப்பனும், அண்ணனும் மாறி, மாறித் துரத்த, தூங்கிப் போனேன்.

அடுத்த ங்காள் மாலை அலுவலகத்துக்கு ஃபோன் வந்தது. என் மனைவி தான்.

“நாங்க கடைத் தெருவுக்குப் போயிட்டு ஆறரை மணி போல திரும்புவோம். நீங்களும் அந்த நேரம் திரும்பினீங்கன்னா சேர்ங்தே வீட்டுக்குப் போயிடலாம். கூடவே, உங்களுக்கு ஒரு அதிசயமும் காத்துக்கிட்டிருக்கு” என்றாள்.

:ஐயோ கருப்பனிடம் என் மனைவியும், மகனும் மாட்டிக்கொண்டாலென்னாகும்?

மனசுக்குள் உதைக்கத்தொடங்கியது.

குடும்பத் தலைவனின் தர்மத்துடன், ஆறு மணிக்கே போய் பேருந்து நிலையத்தில் இறங்கி, அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

சொன்னது போலவே ஆறறை மணிக்கு வந்து விட்டனை மனைவியும், மகனும்.

“அய், அப்பா முகத்தை சாயந்திர வெளிச்சத்திலே பார்க்க எவ்வளவு பிரகாசமாய் இருக்கு” என்று கலாய்த்தான் சீமந்தபுத்திரன்.


“அது முகத்தோட ஒளி இல்லைடா. முல் வழுக்கையோட ஒளிச் சிதறல்” என்று இரகசியம் பேசுவது போல என் மனைவி கேலி செய்ய, சிரிப்பு வந்தது.

கூடவே கருப்பனின் நினைப்பும் வந்தது.

“இதோ பாருங்க ஜாக்கிரதை. அதோ அந்த சந்து திரும்பியதும், கருப்பன் இருப்பான்” என்று எச்சரித்தேன்.

என் மனைவியும், மகனும் ஒருவரை ஒருவை பூடகமாய்ப் புன்னகைத்தனர்.

“இன்னிக்கு உங்க அப்பாவுக்கு அந்த சந்துல ஓர் ஆச்சரியம் காத்துக்கிட்டிருக்கு, இல்லையாடா” என்றாள் மனைவி.

புரியாமல் நடந்தேன். என் கையைப்பற்றி சாந்தப்படுத்தினாள் மனைவி.
என் இரு பக்கமும் கவசமாய் அவர்கள் நடக்க ஆரம்பித்தனர்.

அதொ கருப்பன் என்னைக் கண்டதும் “உர்”ரென உறும ஆரம்பித்த அந்த நாய், என்ன நினைத்ததோ, வெறுமனே பார்த்தபடி நின்றது.

நம்பமுடியாமல் வியப்புடன் கருப்பனைப் பார்த்தேன்

“இந்த நாய், புதுசாய் குட்டி போட்டிருக்குதுங்க. நால்ய் குட்டிங்க.. அழகாய் கருப்பும், வெள்ளையுமாய். இருட்டிலே வரும் போது நீங்க அங்கே இருக்கற அந்த சின்னக் கட்டடம் பக்கம் போயிருப்பீங்க முதல் நாள், குட்டிங்களைப் பாதுகாக்க, கருப்பன் உங்களைப் பார்த்து பயந்து போய்க் குரைச்சிருக்கும். நீங்ககளும் அதைக் கண்டு பயந்து போய், உங்க குடையை ஆட்டியிருப்பீங்க. இது தினசரி வாடிக்கையாய்ப் போயிருக்கணும். தன் குட்டிகளைப் பாதுகாக்க நினைக்கற ஒரு தாயோட உக்ரம் இது. பொதுவாகவே, மனிதனோட பயத்தை எளிதாய் மோப்பம் பிடிச்சிடும் நாய்ங்க..” என்றாள் என் மனைவி.

“அம்மா அதோ பாருங்க நாய்க்குட்டிகளை” என்று உற்சாகமாய் கத்தினான் என் மகன்.

கடைத்தெருவுக்குப் போறப்ப இந்த சந்து வழியாய் வந்தோம். உங்க கருப்பனையும் பார்த்தோம். விஷயம் புரிீஞ்சது. ரொட்டி வாங்கிப் போட்டோன். எல்லா செயல்களுக்குமே மூன்றாவது கோணம்னு ஒண்ணு இருக்குதானே” என்றாள் என் மனைவி.

“அதென்ன மூன்றாவது கோணம்?” என்றேன்.

“பிரச்சனைன்னு வந்தால் நாம பார்க்கற கோணம், எதிராளிங்க பார்க்கற கோண்ம், பிரச்சனையை நிஜமாகவே தீர்த்து வைக்கற கோணம். ஆக அது தான் மூன்றாவது கோணம்” என்றாள்.

ஞானியைக் காண்பது போல் மனைவியைப் பார்த்தேம்.

வீட்டுக்குத் திரும்பியதும் அண்ணனுக்கு ஃபோன் செய்தேன்.

“என்னாச்சு அண்ணா? திடீர் பணத்தேவைன்னு கேட்டியாமே? னீ கேட்ட பத்தாயிரம் ரூபாய் போதுமா, இல்லை கூட வேண்டுமா?”

என் கேள்வியினால் அண்ணன் நெகிழ்ந்திருக்க வேண்டும்.

“நன்றிடா! நீய்ப்படிக் கேட்டதும் அழுகை வந்துடுச்சு” என்றார்.

:என்ன அண்ணா , இதுக்குப்பஒய்..”

“நம்ம வீட்டுக்குப் பின்னாடி பெரிய மாமரம் இருந்துச்சுல்ல, திடீர் பேய்க்காத்துலே, வேரோட சாய்ந்து , நம்ம வீட்டு மேலே விழுந்துடுச்சு. சமையலறைப் பக்கம் சுவர் இடிஞ்சு போச்சு. உடனே மராமத்து பண்ணியாகணும். இருபதாயிரம் செலவு ஆகும்னு கான்ராக்டர் சொன்னார். அதான் உன்னிடம் இருந்ததுன்னா, போட்டுப் புரட்டி சரி பண்ணிடலாம்னு நினைச்சேன்”

“நாளைக்கே அனுப்பிடறேன் அண்ணா. முடிஞ்சா நேரில் வந்தே கொடுக்கப் பார்க்கறேன்” என்றேன்.

ஃபோன் பேசி முடித்ததும் என் மனைவி சொன்னாள்

“இப்ப உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”

3 comments:

  1. கதைகளிலும் நல்ல கதை மோசமான கதை என்பதைத் தவிர மிகச் சிறந்த கதை என்று மூன்றாவது ரகம் ஒன்று உண்டு, இந்தக் கதையைப் போல.

    ReplyDelete
  2. கதையின் உயிரோட்டம்,
    என்னை அப்படியே பாதித்தது !!!!!!!!!
    அதென்ன, மூன்றாவது ரகம் ?,
    முதல் ரகம் உங்கள் கதை !!!!!!!!!
    ரிஷபன்,
    ஆரண்யநிவாஸ் ராமூர்த்தியை
    விட முந்திவிடிவீர்கள்
    போலிருக்கே?
    எனிவே கிரேட் !!!!!!!!!!!!!!!!!!
    கருப்பண்ணனையும்,
    அதன் குட்டிகளையும் மிகவும்
    கேட்டதாகச்சொல்லவும்

    ReplyDelete
  3. ஏன் தமிலிஷில் சப்மிட் செய்யவில்லை?

    ReplyDelete